சென்னை: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலினை கண்டு மகிழ்ந்திடும் வகையில் அமைக்கப்பட்ட பிரத்யேக பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலினை கண்டு மகிழ்ந்திடும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.61 கோடி மதிப்பில் மரத்தாலான பாதை அமைக்கும் பணியானது தமிழ்நாடு முதல்வரால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தப் பாலம் 190 மீ. நீளம், 2.80 மீ. அகலத்துடன் சிகப்பு மெரண்டி, பபூல் மற்றும் பிரேஸ்லியன் ஐ.பி.இ. மரப்பலகைகளால் அமைக்கப்பட்டது.
இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். ஏற்கனவே, மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் கடலினைக் கண்டு மகிழ்ந்திடும் வகையில், ரூ.1.14 கோடி மதிப்பில் மரத்தாலான கடலினை அணுகும் பாதையானது கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சாலைக்கு எஸ்பிபி பெயர்: பிரபல திரையிசை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதன்மைச் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை எனப் பெயரிடப்படும் என தமிழ்நாடு முதல்வரால் அறிவிக்கப்பட்டு, அரசாணை வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதன்மைச் சாலைக்கு புதிதாகப் பெயர் சூட்டப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்கிற பெயர்ப் பலகையினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு,
மறைந்த திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவி எஸ்.பி.பி.சாவித்திரி, மகன் எஸ்.பி.பி.சரண், மகள் எஸ்.பி.பி.பல்லவி, சகோதரி எஸ்.பி.சைலஜா உள்ளிட்ட குடும்பத்தினர், துணை ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், தெற்கு வட்டார துணை ஆணையர் எம்.பி.அமித், மண்டல குழு தலைவர்கள் எஸ். மதன்மோகன் (தேனாம்பேட்டை), துரைராஜ் (அடையாறு), மாமன்ற உறுப்பினர் ராதிகா மற்றும் மாமன்ற பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மகிழ்ச்சியை கண்டு மகிழ்ந்தோம்
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 2021ல் திமுக அரசு அமைந்த ஓரிரு மாதங்களிலேயே, மாற்றுத்திறனாளிகள், மெரினா கடற்கரைக்குச் சென்று கடல் அலையில் கால் நனைக்கும் வண்ணம், பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டது.இதற்கு கிடைத்த பாராட்டையும், வரவேற்பையும் மனதிற் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும், மாற்றுத்திறனாளிகள் கடல் வரை சென்று வரும் வண்ணம் சிறப்பு நடைபாதையை அமைத்திட உத்தரவிட்டார்கள். அதன்பேரில், சென்னை மாநகராட்சி மூலம், ரூ.1.61 கோடி மதிப்பில் பெசன்ட் நகர் கடற்கரையில், அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை இன்று திறந்து வைத்தோம். மரப்பாதையின் வழியே கடல் அருகே சென்று அலையை ரசித்த மாற்றுத்திறனாளிகளின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்ந்தோம். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மணிமண்டபம் குறித்து முதல்வர் முடிவு செய்வார்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: மறைந்த பாடகர் எஸ்.பி.பி வாழ்ந்த இந்த காம்தார் நகர் முதல் தெருவிற்கு அவருடைய நினைவாக அவருடைய பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர், அவருடைய ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அந்த கோரிக்கையை ஏற்று சென்ற ஆண்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நானும், அமைச்சர்களும், மேயரும் இன்று அரசின் சார்பாக அதற்கான பெயர் பலகையை வைத்திருக்கிறோம். அதற்காக அவருடைய குடும்பத்தினர் இதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டால் முதல்வர் முடிவு செய்வார்,’’ என்றார்.
உற்சாக வரவேற்பு
பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை திறந்து வைக்க வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்ேனற்ற சங்கத்தின் தலைவரும், மாற்று திறனாளிகள் நல வாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் தலைமையில் மாற்று திறனாளிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.