டெல்லி:நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை ஒட்டி டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மணிபபூர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கை முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இதை “சிறப்பு அமர்வு” என்று விவரித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், தற்போதைய மக்களவையின் 13வது அமர்வு என்றும், மாநிலங்களவையின் 261வது அமர்வு என்றும் அரசு பின்னர் தெளிவுபடுத்தியது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவும் இந்த அமர்வின் போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா பற்றிய பேச்சுக்களும் உலா வருகின்றன.
கூட்டத்தொடரின் முதல் நாளில் சம்விதான் சபையில் தொடங்கி 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் பயணம் குறித்த சிறப்பு விவாதத்தை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.