சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம், கொசு ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்டவை எடுக்க வேண்டும் என தமிழக பொது சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திருவண்ணாமலை சுகாதாரத்துறைக்கு, துணை இயக்குனர் பொது சுகாதார துறை அனுப்பிய சுற்றறிக்கை: திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா வரும் 26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி சிறப்பு மருத்துவ முகாம், கொசு ஒழிப்பு நடவடிக்கை, குளோரினேஷன் நீர் அளவு பரிசோதனை உள்ளிட்டவை சுகாதாரத்துறை சார்பில் செய்ய வேண்டும்.
குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, செய்யாறு உள்ளிட்ட மாவட்டங்களின் சார்பில் நடமாடும் மருத்துவமனை 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை திருவண்ணாமலையை சுற்றி இருக்க வேண்டும். 60 குழுக்கள் தொடர்ந்து பேருந்து நிலையம் மற்றும் கோயிலை சுற்றி நீரில் உள்ள குளோரினேஷன் அளவை பரிசோதிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து விழா நாட்களில் கிரிவலப்பாதையில் விற்பனை செய்யப்படும் உணவுகளை கண்காணிக்க வேண்டும்.