சென்னை: பக்ரீத் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,584 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 520 பேருந்துகளும், சனிக்கிழமை 550 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 100 பேருந்துகளும், சனிக்கிழமை 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், மாதவரத்திலிருந்து 6ம் தேதி மற்றும் 7ம் தேதிகளில் 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 14,413 பயணிகளும் சனிக்கிழமை அன்று 5,990 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 15,680 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.