சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: செப்.2ம் தேதி, செப்.3ம் தேதி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு இன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 11,187 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் மற்றும் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 400 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 11,114 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.