*மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2024-25ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி பயிலச்செய்யும் வகையிலும், தோல்வியுள்ள மாணவர்களை சிறப்பு துணைத்தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெற வைப்பதற்கும் மற்றும் மாணவர்களின் கல்வி நலன் கருதி மாணவர்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களையும் கல்லூரி படிப்பை படிக்க வைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மாவட் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.
இம்முகாமில் சுமார் 150 மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டு தங்கள் உயர்கல்விக்கு தேவையான கோரிக்கைகள் மற்றும் தகவல்களை மனுக்களாக வழங்கி தகவல்களை பெற்றுக்கொண்டனர்.
இம்முகாமில் கல்லூரி படிப்பை தொடர நிதியுதவி, விடுதி வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் அளித்தனர். மேலும் எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது, முதல் பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை சான்றிதழ்களை பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்பட்டது.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு துறைகளின் கீழ் கல்லூரி பயிலும் மாணவ-மாணவியர்களுக்கென சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை கல்வி கற்பதற்கு அரசின் சார்பில் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் கல்லூரி படிப்பு பயின்று வாழ்வில் வெற்றியடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், மாணவ-மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.