சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பணியில் சேரும் இரண்டாம் நிலை காவலர்கள் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு முதல் நிலை காவலர்களாகவும், தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தலைமை காவலர்களாகவும், அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அதாவது 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு பெறுவார்கள்.
கடந்த 13ம் தேதி அரசு வெளியிட்ட செய்தியில், முதலாம் நிலை காவலராக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை, 3 ஆண்டுகளாக குறைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் 2001-05 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த சுமார் 35,000 காவலர்களுக்கு பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்றும், நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.