மும்பை: மகாராஷ்டிராவில் தகுதி நீக்க மனு தொடர்பாக பதிலளிக்கும்படி 54 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது குறித்து 7 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உடைந்தது. அதே போல் சரத்பவார் கட்சி அஜித் பவார் தலைமையில் உடைந்தது. சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க மனு குறித்த விசாரணையை சபாநாயகர் ராகுல் நர்வேகர் விரைவில் நடத்தி முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் அஜித்பவார் உள்ளிட்ட கட்சி மாறியவர்கள் மீதும் சரத்பவார் கட்சியினர் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளனர். இந்நிலையில் தகுதி நீக்கம் தொடர்பாக பதிலளிக்க வலியுறுத்தி 54 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறுகையில், ‘‘முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் மற்றும் உத்தவ் தாக்கரே அதிருப்தி அணியில் இருக்கும் 14எம்எல்ஏக்களுக்கும் அவர்களுக்கு எதிரான தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் குறித்து பதிலளிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
7 நாட்களுக்குள் இந்த நோட்டீசுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 54 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிவசேனா பிரிந்த பின்பு வந்த எம்எல்ஏ ருதுஜா லட்கோவிற்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை” என்றார். இது குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாத் கூறுகையில், ‘‘எனக்கு தற்போது வரை மாநில சட்டப்பேரவையில் இருந்து எந்த நோட்டீசும் வரவில்லை. உத்தவ் தாக்கரே அணியில் இருக்கும் ஆதித்ய தாக்கரே உட்பட 14 எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.