மெக்சிகோ: ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு செய்துள்ளது. உலகில் பணக்கார பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள எலான் மஸ்க், செவ்வாய் கோளில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவருடைய ஸ்பேஸ்எக்ஸ் என்ற வர்த்தக விண்கல நிறுவனத்தின் உதவியுடன் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு ஏவி சோதனை செய்து வருகிறார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 403 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் விண்கலம் கடந்த மே மாத இறுதியில் ஏவப்பட்டது. ஆனால் விண்ணில் ஏவப்பட்ட 30 நிமிடங்களில் அந்த விண்கலம் வெடித்து சிதறியது. அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையருகே இந்த விண்கலம் வெடித்து விழுந்தது. இதில், மெக்சிகோவின் தமவுலிபாஸ் மாகாணத்திலும் அதன் பாகங்கள் விழுந்துள்ளன.
இதையடுத்து மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷீன்பாம், உண்மையில் குப்பைகள் சேர்ந்துள்ளன. தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு ஏற்ப, எந்த வகையிலான சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டு உள்ளன என பரிசீலனை செய்யப்படும் என்றார். ராக்கெட் கழிவுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஒரு விரிவான மறுஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறினார்.