சென்னை: விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. விண்கலத்தில் இருந்து பிரிந்த பின் லேண்டர் எடுத்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் -3 விண்கலம் எல்எம்வி 3 எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் கடந்த 5ம் தேதி முதல் பயணிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் விக்ரம் லேண்டர் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. லேண்டரின் உயரமும் படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நேற்று லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: லேண்டரின் செயல்பாடுகள் சரியாக உள்ளது. லேண்டரின் உயரம் குறைக்கும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. தற்போது 113 கி.மீ. x 157 கி.மீ. தூரத்தில் நிலவின் சுற்றுப்பாதையில் உள்ளது. 2ம் கட்ட உயரம் குறைக்கும் பணி நாளை (20ம் தேதி) மதியம் 2 மணியளவில் நடைபெறும். இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் விண்கலத்தில் இருந்து பிரிந்த பிறகு லேண்டரில் உள்ள இமேஜர் கேமரா எடுத்த படங்களை இஸ்ரோ வெளியிட்டது. இந்த படங்களில் நிலவின் மேற்பரப்பில் மூன்று இடங்களை குறிப்பிட்டு காட்டுகிறது. ஃபேப்ரி, கியோர்ட்னொ ப்ரோனோ, ஹர்கெபி ஜே என அந்த இடங்களை குறித்துள்ளது. மேலும் கடந்த 15ம் தேதி விண்கலத்தில் இருந்த போது லேண்டர் பொசிஷன் டிடெக்சன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.