நன்றி குங்குமம் டாக்டர்
இருமணம் கொண்ட திருமண வாழ்வில்…
மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி
*உனக்கு கல்யாணம் பா, வந்து தாலிக் கட்டு..
*உனக்கு கல்யாணம் பண்ணலாம் இருக்கோம், பிடிச்சு இருக்கா சொல்லு..
*நாங்க கல்யாணம் பண்ணிட்டோம்…
*கல்யாணமா, இன்னும் படிக்கணும், வேலையில் செட்டில் ஆகணும்..
*எங்களுக்கு கல்யாணம் வேண்டாம்…
மேலே சொன்ன இந்த வரிகளிலேயே நம் கலாச்சார மாற்றம் திருமண விஷயத்தில் எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. தற்போது பல வீடுகளில் திருமணம் ஆகாமல் அல்ல, திருமணம் செய்யாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது நம் நாட்டிலா என்றால், உலகம் முழுவதும் திருமணம் வேண்டாம் என்று கூறும் இளைஞர்கள் ஹேஷ்டேக் போட்டு கொண்டாட்டமாக தெரிவிக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் திருமணமாகாமல் இருக்கும் நபர்களை சர்வே எடுத்த கணக்கெடுப்பில் முதலில் ஆஸ்திரேலியா 14%, ரெண்டாவது லத்தீன் அமெரிக்கா 13.4%, மூன்றாவது ஐரோப்பா 10.8%, நான்காவதாக ஆப்பிரிக்கா 6.1%, கடைசியாக தெற்கு ஆசிய நாடுகளில் 1% நாம் இருக்கிறோம்.
இந்த சர்வே மூலம் ஐக்கியநாடுகளின் பதில் என்னவென்றால், திருமணத்தால் தற்கொலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும், குடும்ப வன்முறை தாக்கம் குறைகிறது என்றும், தம்பதிகளின் கொலை சார்ந்த குற்றவியல் நடவடிக்கையும் குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.சமூகவியலாளார் ஆண்டனி கிடன்ஸ் ஆய்வு செய்ததில் நவீனச் சமுதாய மாற்றமும், தனியுடமை என்ற போக்கும் தான் இளைஞர்கள் மத்தியில் இம்மாதிரியான முடிவினை எடுக்க வைக்கிறது என்கிறார்.
அதாவது
1.தனிப்பட்ட நபர்களுக்கு தேவையான நேரத்தை செலவிடவும், அதற்கான சூழலும் அமைகிறது.
2.பல ஆண்டுகளாக செய்து வந்த சமூகச் சம்பிரதாயங்களின் மூடநம்பிக்கையை பிரித்து அதன் தன்மையை தெளிவுபடுத்துகிறார்கள்.
3.வேலைப் பார்க்கும் இடங்களில் ஏற்படும் தாக்கங்களின் பிரதிபலிப்பும் காரணமாக அமைந்து விடுகிறது.
இம்மூன்று காரணங்கள் தான் வாழ்வியல் சார்ந்த பதில்களாக இந்தச் சமூகமாற்றத்தின் பின்புலனாக இருக்கிறது என்று சமூகவியலாளார் ஆண்டனி கிடன்ஸ் கூறுகிறார்.
இவ்வாறாக வளர்ந்த நாடுகளில் ஏற்படும் நவீனச் சமுதாய மாற்றம் இந்தியாவுக்கு என்றுமே புதிய விஷயமல்ல. ஆனால் தற்போது பழமை வாய்ந்த கலாச்சாரமும், சடங்குகளும் கொண்ட இந்தியாவிலும் நவீன சமுதாயத்தையும், தனியுடமை தாக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்ட தலைமுறை மக்களை சந்திக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.உலகஅளவில் இளைய சமுதாய நாடாக இந்தியா இருந்து கொண்டிருக்கிறது. 1991 இல் 222.7 மில்லியன், 2011 இல் 333.4 மில்லியன், 2021 இல் 371.4 மில்லியன் என்ற அளவில் இளைஞர்களின் ஆதிக்கம் அதிகம் கொண்ட சமுதாயமாக இந்தியா இன்றும் இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களை கோலாகலமாக கொண்டாடுவார்கள். ஒன்று திருமணம் மற்றொன்று பிரம்மச்சரியம். இரண்டுமே பொது மக்களின் ஒப்புதலோடு கொண்டாடக் கூடிய விஷயமாக காலம்காலமாக அரங்கேறியுள்ளது.ஆனால் நவீனச்சமுதாயத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை அளவில் அதிகமாக இருந்தும் ஏன் காதலும், திருமணமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே பெரிய பிரச்சனையாக மக்களின் வாழ்வில் வந்துள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டு இளைஞர்களைப் பற்றிக் கூறுவது என்னவென்றால், நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், பல இடங்களுக்கு, பல நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனாலும் யார் மீதும் ஈர்ப்பு வரவில்லை என்று கூறும் இளைஞர்கள் இன்றைய நிஜவுலக ஏலியன்களாக பெரியவர்களுக்கு தெரிகிறார்கள்.
தேசியப் புள்ளியியல் அலுவலகம் சார்பாக 2019 இன் கணக்கெடுப்பின் படி, மிகவும் அதிகமாக தனியாக இருக்கும் இளைஞர்களின் மாநிலமாக ஜம்மு & காஷ்மீர், உத்திரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் இருக்கிறது. குறைவான எண்ணிக்கையில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஹிமாச்சல் என்று தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
1960 -1970 களில் மிகப்பெரிய மாற்றமாக கூட்டுக் குடும்ப அமைப்பில் விரிசல் விழுந்தது. கிராமங்களில் இருந்து பிரமிக்க வைக்கும் அளவிற்கு நகர்புறத்திற்கு சென்று வாழ வேண்டும் என்ற ஆசையும், பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஆதங்கமும், தனிமனித சுதந்திரமும் தேவையான ஒன்றாக மக்களின் சிந்தனையில் தோன்ற ஆரம்பித்தது.
இந்த மூன்றும் 2000களில் தலைமுறை மாற்றத்தினை கண்கூடாக பார்க்கும் வாய்ப்பும், அதை அனுபவிக்கவும் செய்த சமூகமாக நாம் இருக்கிறோம். இதனால் கல்வி கற்கும் வளரிளம்பருவ வயதினரின் எண்ணிக்கையும், வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையும், தன்னுடைய அறிவுத் திறமையால் சிறந்த நிர்வாகம் சார்ந்த பதவிக்கு அமர்த்தப்படுவதும் கணிசமாக உயர்ந்தது.
15 வயதிலிருந்து 29 வயதுள்ள இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல், அந்த வீடுகளில் உள்ள பெற்றோர்களுக்கும் திருமணம் சார்ந்த எண்ணங்கள் குறைய ஆரம்பித்தது. 2011 இல் 17.2% இளைஞர்கள் திருமணம் செய்யாமலும், 2019 இல் 23% திருமணம் செய்யாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை கணக்கெடுத்து இருக்கிறார்கள்.உண்மையில் இந்த எண்ணிக்கை எல்லாம் சரியாக இருப்பதற்கு என்ன மாதிரியான காரணங்கள் இருக்கிறது என்று Frontiers Magazine நான்கு காரணங்களை சர்வே எடுத்துக் கூறுகிறார்கள்.
முதலில் இளைஞர்களின் அறிவுரீதியான சிந்தனையில் ஏற்பட்ட நவீன மாற்றம், காதல் சார்ந்த விஷயங்களில் பழமையான சிந்தனை முறை இருக்கிறது. உலக விஷயங்களை பேசும் நட்பில் இருக்கும் இணக்கம், ஆண்/பெண் ஈர்ப்பில் இல்லை. இருவருமே யாரையும் ஈர்ப்பதற்கு தேவையான விஷயங்களைச் செய்யும் எண்ணத்தில் ரொம்ப பலவீனமாக இருக்கிறார்கள்.
இரண்டாவதாக, இங்கு பெரும்பாலான இளைஞர்கள் எதிர்பாலின ஈர்ப்பால் மனதளவில் காயப்படவும், புறக்கணிப்பையும் எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை.
மூன்றாவதாக, காதல், காமம் இதற்கு முன்னுரிமை தராமல், மற்ற விஷயங்களில் முன்னுரிமை தரும் இளைஞர்கள் கணிசமாக அதிகரிக்கிறார்கள்.நான்காவதாக தங்களுடைய கனவுகளுக்கு ஏற்றவாறு மட்டுமே இருக்க வேண்டும் என்று துணையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக காலத்தை விரயமாக்குகிறார்கள்.இந்த நான்கு காரணங்களும் தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கான சூழலைக் கூறுகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்பினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Nielsen IQ என்ற கார்ப்ரேட் நிறுவனம் தனியாக இருக்கும் இளைஞர்களின் உளவியல் ரீதியான அழுத்தங்களின் தாக்கங்களும், அதன் பிரதிபலிப்பையும் சர்வே எடுத்தார்கள். இரண்டில் ஒருவருக்கு தன்னுடைய உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருக்கிறது.மூன்றில் ஒருவருக்கு எதை எடுத்தாலும் தவறான அபிப்ராயத்தை தொடர்ந்து கூறுகிறார்கள்.இன்றைய தலைமுறையில் மூன்றில் ஒருவர் காதலில் ஏற்படும் உறவின் பிரிவில் இருந்து வெளிவராமல் இருக்கிறார்கள்.
இவை எல்லாவற்றையும் மீறி ஊடகங்களின் தாக்கமும், சோசியல் மீடியாவின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. பத்தில் எட்டு பெண்கள் பிரபலங்களின் பேச்சை அதிகமாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். சோசியல் மீடியாவில் பெரும்பாலானோர் தங்களைத் தாங்களே பிரபலங்களாகவும், ஆதிக்கம் செலுத்தும் நபராகவும் தவறான பிம்பத்தில் இருக்கிறார்கள்.
வேலைக்குச் செல்லும் இடங்களில் அதிக வேலைப்பளு, விருப்பமில்லாத பணியிடச் சூழல், பிடிக்காத மேலிட அதிகாரிகள் என்று மூன்று காரணங்களுமே தனிநபரால் வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல் இருக்கிறார்கள்.என்ன தான் சிங்கிள் கெத்து என்று இளைஞர்கள் அலற விட்டாலும், அவர்களின் மனஅழுத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிறது. மரபணு ரிதியாக கலாச்சாரத்தில் ஊறிய நபராகவும், நவீன சிந்தனைக் கொண்ட நபராகவும் தனக்கான உடலில் இருவேறு எண்ணங்களைக் கொண்ட நபராக ஒவ்வொரு இளைஞர்களும் இருக்கிறார்கள். வெளிப்படையாக காண்பிக்கும் தன்னுடைய பிம்பத்துக்கும், தனக்குள் நடக்கும் உளவியல் ரீதியான இயல்பான குணத்துக்கும் இடையில் சிக்கி அல்லலாடும் இளையச் சமுதாயமாக இந்தியா இருக்கிறது.
அதனால் மன ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு வயதாக வயதாக உடம்பில் ஏற்படும் மாற்றத்தின் விளைவால் இன்னும் தாழ்வுமனப்பான்மைக்குள் சிக்கும் இளைஞர்களின் தாக்கத்தால் ஏற்படும் பதற்றம், தனிமை, ஒரு பற்றற்ற நிலை என்று குழம்பிய நிலையில் இருக்கிறார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல், அகத்தின் பிரச்சனையை உடல் வெளிப்படுத்துகிறது. நீண்டகாலமாக இருக்கும் வியாதிகள், தனிமையின் விரக்தி, தற்கொலை எண்ணங்கள், எதற்கெடுத்தாலும் பயம், சிந்தனையில் நிலையில்லாத தன்மை என்று 54% மக்கள் தனிமையில் அவதிப்படுகிறார்கள்.
இந்த மனரீதியான உளைச்சலால் இளைஞர்களின் சதவீத எண்ணிக்கை 2021 இல் 371.4% எண்ணிக்கை 2036 இல் 345.5 மில்லியனாக குறையப் போவதாக புள்ளியியல் தகவல் நிர்வாகம் அறிக்கை விடுகிறது.நவீனச் சமுதாய மாற்றத்தில் பொருளாதாரமும், சூழலை அனுபவிக்கும் வாய்ப்பும் அதிகமிருந்தாலும், இயற்கையின் உந்துதலே எதிர்பாலின நபர்கள் சேர்ந்து வாழ்வது தான் அடிப்படை சித்தாந்தமாக இருக்கிறது. இதை என்றும் யாராலும் மாற்ற முடியாது என்பதே இந்த ஆய்வுகள் நம்மை எச்சரிக்கிறது.