*பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு வருவதால், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து திறக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தின் தலைநகராக இருப்பதால் ராமநாதபுரத்திற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம், தேவிப்பட்டிணம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி போன்ற ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு வெளிமாவட்ட, மாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து மிகுந்த நகராக விளங்குகிறது. இங்கு சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள், மதுரை உள்ளிட்ட தென் மண்டலம், விழுப்புரம் உள்ளிட்ட வடமண்டலம், கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மண்டலம், கன்னியாகுமரி முதல் வேளாங்கண்ணி, சிதம்பரம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலை பகுதி என மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், முக்கிய நகரங்கள், சுற்றுலாதலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
மாவட்டத்தில் ராமேஸ்வரம், கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள 6 பஸ் டிப்போக்களில் இருந்து 120 டவுன் பஸ்கள் உட்பட 320க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் ராமநாதபுரத்திற்கு நாள் ஒன்றிற்கு 400க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கிறது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் 2023ம் ஆண்டில் ரூ.20 கோடி மதிப்பில் 16,909 சதுர அடி பரப்பில் புதியதாக ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைகள், சந்தை கடைகள், அடிப்படை வசதிகள் அடங்கிய உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாகியும் பணிகள் நிறைவடையாமல், ஆமை வேகத்தில் மெதுவாக நடந்து வருகிறது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து பஸ்களும் ரயில் நிலையம் எதிரே உள்ள பழைய பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது. அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் வெயில், மழை, பகல்,இரவு என அனைத்து காலத்திலும் அவதிப்படும் நிலை உள்ளது. ஒரே சமயத்தில் 10க்கும் மேற்பட்ட பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வருவதால் இடநெருக்கடி ஏற்படுகிறது.
ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்துவதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதன் வழியாக மதுரை-ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நாள்தோறும் நடந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
பள்ளி,கல்லூரி, அலுவலக நேரங்களில் பஸ் ஏறி, இறங்க பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். நெடுந்தொலைவில் இருந்து வரும் வெளிமாவட்ட பஸ்களை சிறுது நேரம் நிறுத்தி ஓய்வு எடுக்க முடியாமல் டிரைவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
மேலும் சந்தைக்கடை பணிகளும் முடிந்து பயன்பாட்டிற்கு வராததால், வாரச்சந்தை மற்றும் தினந்தோறும் விற்கும் நடைபாதை வியாபாரிகள் சாலையோரங்களில் கடைகளை போடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளளனர்.
கலெக்டர் அறிவிப்பு
புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய பணிகள் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் நடந்து வருகிறது. பணிகள் முடிந்ததும் விரைவில் திறப்பு விழா காணப்படும்’ என்றார்.