திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல்நாளிலேயே 3 பேர் பலியாகி விட்டனர். கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் நேற்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 16 வருடங்களுக்குப் பின் இந்த வருடம் தான் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கியுள்ளது. கடந்த 2009ல் மே 23ம் தேதி பருவமழை தொடங்கியது. கடந்த வருடம் மே 30ம் தேதி தொடங்கியது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், திருவனந்தபுரம், கண்ணூர், திருச்சூர், காசர்கோடு உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கண்ணூர் அருகே உள்ள கரிவெள்ளூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோபால் வர்மன் (33) மண் சரிந்ததால் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். சக தொழிலாளி ஜிதின் என்பவர் காயமடைந்தார்.
திருச்சூர் அருகே கோட்டப்புரம் பகுதி ஆற்றில் மணல் அள்ளுவதற்காக நேற்று 4 தொழிலாளர்கள் படகில் சென்றனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் படகு கவிழ்ந்தது. இதில் சந்தோஷ், பிரதீப் ஆகிய 2 பேர் தண்ணீரில் மூழ்கினர். இதனால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோழிக்கோடு, காசர்கோடு, எர்ணாகுளம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடற்கரைகள் உள்பட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் மலைப் பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.