சென்னை: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்தார். தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று (மே 24) அதிகாலை 5.30 மணி அளவில், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 8.30 மணி அளவில், ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கி.மீ தொலைவில் நிலவியது. இது, மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளில், நேற்று நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 27ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து உதகை மற்றும் வால்பாறை பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசாது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜூன் 1ல் வழக்கமாக தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, கேரளத்திலும், தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 11 செ.மீ. ஆனால் 27 செ.மீ மழை பெய்துள்ளது. எனவே மார்ச் முதல் தற்போது வரை தமிழகத்தில் இயல்பைவிட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு ரத்னகிரியில் நிலைகொண்டுள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் கனமழை பெய்துள்ளது. நேற்று (மே 24) நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோன்று இன்றும் (மே 25) இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை தொடரும். நீலகிரி, கோவையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புக் குழுக்கள் அந்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே தூத்துக்குடி, பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு 3ம், மேலும் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு 1ம் ஏற்றப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.