சென்னை: இந்தாண்டு பருவமழை தொடங்கியதில் இருந்தே மழை அதிக அளவில் பெய்யத் தொடங்கியது. இதன்காரணமாக பல அணைகள் நிரம்பி வழிகின்றன. தற்போது மீண்டும் கேரளாவில் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இந்த மழை நீடித்து இந்த மாத இறுதியில் அதீத மழையாக பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மாலையில் வெப்பச் சலன மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை தென் பகுதியில் சற்று குறைவாக இருந்தாலும் நிறைவான அளவில் பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாநிலங்களில் இந்த தென்மேற்கு பருவமழை பாதிப்பில்லாத வகையிலும் வட மாநிலங்களில் அதிக பாதிப்பையும் உண்டாக்கும்.
இன்று அல்லது நாளை தீவிரம் அடையத் தொடங்கும் தென் மேற்கு பருவமழை கேரளாவில் சற்று கூடுதலாக பெய்ய துவங்கும். ஓரிரு இடங்களில் அதீத மழை பெய்யும். கர்நாடகாவின் உள்பகுதி மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதி, மத்திய பகுதிகளிலும் படிப்படியாக மழை பரவத் தொடங்கும். மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளிலும் கூடுதலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குஜராத் முதல் ஒடிசாவுக்கு இடைப்பட்ட பகுதிகளிலும் பீகார், ஜார்கண்ட் பகுதிகளிலும் இந்த காற்றழுத்தம் மெல்ல நகரும் தன்மை காரணமாக நல்லமழை பெய்யும். தென்மேற்கு பருவமழை முடியும் வரையில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களிலும் மழை நீடிக்கும். வருகின்ற 10ம் தேதியில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து குஜராத் வழியாக அரபிக் கடல் பகுதிக்கு சென்று விடும். இதையடுத்து வங்கக் கடலில் 10ம் தேதியில் ஒரு புதிய காற்று சுழற்சி உருவாகி மீண்டும் அதே இடத்துக்கு வந்தாலும் மத்திய பிரதேசம் வழியாக நகர்ந்து செல்லும். இதன் காரணமாக 12ம் தேதியில் தென் மாநிலங்களில் கூடுதலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளாவில் மிக கனமழை மற்றும் கனமழையும் பெய்யும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.