சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் நேற்று மாலை இரவில் வெப்பச் சலன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவாகி ஒடிசா -மேற்கு வங்க கரையைத் தொட்டு தரையேறிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஒடிசா கடலோரம் தொடங்கி பீகார், ஜார்கண்ட், சத்தீஷ்கர் வரையில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடித்துக் கொண்டிருக்கிறது. நேற்று தீவிரம் அடையத் தொடங்கியுள்ள தென் மேற்கு பருவமழை கேரளாவில் சற்று கூடுதலாக பெய்யத் தொடங்கும்.
ஓரிரு இடங்களில் அதீத மழை பெய்யும். கர்நாடகாவின் உள்பகுதி, கர்நாடகாவின் கடலோரப் பகுதி, மத்தியப் பகுதிகளிலும் படிப்படியாக இந்த மழை பரவத் தொடங்கும். மகாராஷ்ட்ரா, கோவா, ஆந்திரா, தெலங்கானா பகுதிகளிலும் கூடுதலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குஜராத் முதல் ஒடிசாவுக்கு இடைப்பட்ட பகுதிகளிலும், பீகார், ஜார்கண்ட் பகுதிகளிலும் இந்த காற்றழுத்தம் மெல்ல நகரும் தன்மை காரணமாக நல்ல மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை முடியும் வரையில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட கிழக்கு மாநிலங்களிலும் மழை நீடிக்கும்.
இதையடுத்து, 10ம் தேதியில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து குஜராத் வழியாக அரபிக் கடல் பகுதிக்கு சென்று விடும். இதற்கடுத்து, வங்கக் கடலில் 10ம் தேதியில் ஒரு புதிய காற்று சுழற்சி உருவாகி மீண்டும் அதே இடத்துக்கு வந்தாலும், மத்திய பிரதேசம் வழியாக நகர்ந்து செல்லும். இதன் காரணமாக 12ம் தேதியில் தென் மாநிலங்களில் கூடுதலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளாவில் மிக கனமழை மற்றும் கனமழையும் பெய்யும். பரவலாக மழை பெய்யும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் நேற்று மழை பெய்துள்ள நிலையில், சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரையில் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில் நேற்று 102 டிகிரி வெயி்ல் கொளுத்தியது. தூத்துக்குடி, வேலூர், நாகப்பட்டினம், சென்னை, தஞ்சாவூர் மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 8ம் தேதி வரையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் 100 டிகிரியாக இருக்கும். மேலும், தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.