டெல்லி: தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரு வாரம் முன்பாக, கடந்த 24-ம் தேதியே தொடங்கியது. அடுத்த நாளே பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல கர்நாடகா, மராட்டியத்தில் வெளுத்தும் வாங்கும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் நாடு முழுவதும் 108% பதிவாகக் கூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகும். தென் மாவட்டங்களில் இயல்பான அளவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.