சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து, வலுவான தரைக்காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்தும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதை அடுத்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது.
குறிப்பாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வங்கக் கடலில் மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது மேலும் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், வலுவான தரைக்காற்று மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வேகத்தில் வீசும் வாய்ப்பும் உள்ளது. இதேநிலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.