வால்பாறை : வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. கேரள எல்லையோரம் உள்ள மலைப்பகுதி, தமிழ்நாட்டில் கேரள எல்லையோர கிராமங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை பகுதியில் சாரல் மழையும், கவர்க்கல், வாட்டர்பால்ஸ், அட்டகட்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றும் நீடிக்கிறது. புதிய நீர் வீழ்ச்சிகள், ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. எனவே ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதில் சோலையார் அணையில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
வால்பாறை பகுதியில் பெய்யும் பருவமழை நீர் அனைத்தும் சோலையார் அணைக்கு வந்து சேரும். வரும் நீர் பரம்பிக்குளம் அணையில் சேர்த்து வைக்கப்பட்டு, ஆழியார் அணை மற்றும் திருமூர்த்தி அணைகள் வழியாக 5 மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுவது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளதால் சோலையார் அணை மற்றும் பி.ஏ.பி திட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி சோலையார் அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 1,110 கன அடியாக இருந்தது. 165 அடி உயரம் உள்ள அணையில் 96 அடி நீர்மட்டம் உள்ளது. சோலையாறு மின் நிலையம் 840 கன அடி நீரில் இயக்கப்பட்டு, வெளியேறும் நீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. அணையில் 2,476 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையால் விரைவில் சோலையார் மீண்டும் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.