சென்னை: தென் இந்தியாவில் முதன்முறையாக இரு மாநிலங்களுக்கிடையே பிரம்மாண்ட மெட்ரோ ரயில் அமைகிறது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை ஒசூர் வரை நீட்டிக்க கர்நாடக மாநிலம் சார்பில் ஒன்றிய அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் கடிதம் அனுப்பியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது தென் இந்தியாவின் இரு மாநிலங்களுக்கிடையே மெட்ரோ ரயில் சேவைக்கான ஆய்வறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஒசூர் 20.5 கிமீ தொலைவில் உள்ளது. இந்த 20.5 கிலோ மீட்டர் தொலைவில் 11.7 கிலோ மீட்டர் கர்நாடகா மாநிலத்திலும், 8.8 கிலோ மீட்டர் தமிழ்நாட்டிலும் உள்ளது. இரண்டு இடங்களையும் இணைக்கும்போது, மாநிலங்கள் போக்குவரத்து அமைப்புக்கான திட்டச் செலவை பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி விரிவாக்கமான நொய்டா மற்றும் டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு இடையே ஏற்கனவே மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாநிலங்களுக்கு பிரமாண்ட திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.