Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2 ஆண்டில் ஒரு கூட்டம் கூட நடத்தாமல் தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழு கலைப்பு: கருத்துரிமையை நசுக்கும் ஒன்றிய அரசு

நெல்லை: ஒன்றியத்தில் பாஜ அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ரயில்வே வளர்ச்சிக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது. ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வதை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக ரயில்வேயை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பயணிகளுக்கான சாதாரண ரயில் வசதிகளை குறைத்து, வந்தே பாரத் உள்ளிட்ட வருவாய் அதிகம் உள்ள ரயில்களை இயக்குவதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துகளும் துறையின் கவனக்குறைவை சந்தி சிரிக்க வைக்கிறது. ரயில்வேயில் மண்டல அளவிலான ஆலோசனைக்குழு மற்றும் கோட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களுக்கும் முன்பு போல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

பயணிகளின் கருத்துகளை சுமந்து செல்லும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளை ரயில்வே துறை காது கொடுத்து கேட்பதில்லை. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை மண்டல ஆலோசனைக் குழுவில், ரயில்வே துறை மூலம் சிறப்பு பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்படுவோர், தொழில், வர்த்தகம் சார்ந்த சபைகளின் பிரதிநிதிகள், வேளாண் துறை, மாற்றுத்திறனாளி சங்கத்தினர், ரயில் பயணிகள் சங்கத்தினர், 9 எம்பி.க்கள், மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு எம்எல்ஏ, 6 ரயில்வே கோட்டங்களில் இருந்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்டோர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இடம் பெறுவர். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்.

இந்நிலையில் இம்முறை தெற்கு ரயில்வே மண்டல ரயில்வே ஆலோசனைக்குழு குறித்த காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டுள்ளது. கடந்த 1.2.2023ல் பதவியேற்ற இவர்களது பதவிக்காலம் வரும் 31.1.2025ல் நிறைவு பெறுகிறது. இம்முறை தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு ஒரு கூட்டம் கூட நடத்தப்படாமல், மண்டல ஆலோசனைக் குழுவை கடந்த 1ம் தேதி தெற்கு ரயில்வே கலைத்து விட்டது. இதற்கான சுற்றறிக்கையை அனைத்து ரயில்வே மண்டல ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கும் தெற்கு ரயில்வே அனுப்பி வைத்துள்ளது.

இதனால் மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டல குழு ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூறுகையில், ‘‘ ஏதாவது ஒரு கூட்டம் நடத்தினால் மட்டுமே எங்கள் பகுதி தேவைகள், குறைகளை தெரிவிக்க முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டனர். ஆண்டுக்கு 3 கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால் ஒரு கூட்டம் கூட நடத்தாமல் எங்கள் குழுவே இம்முறை தன்னிச்சையாக கலைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

* ஐடி கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

தெற்கு ரயில்வே துணை பொதுமேலாளர், மண்டல ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘ரயில்வே வாரியம் கடந்த செப்டம்பர் 30ம் தேதியோடு மண்டல ஆலோசனைக் குழுவினரின் பதவிக்காலம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளது. விரைவில் புதிய கமிட்டியும் அமைக்கப்பட உள்ளது. ரஎனவே உறுப்பினர்கள் அனைவரும் அடையாள அட்டையை விரைந்து நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பாஜ ஆதரவாளர்களை நியமிக்க திட்டமா?

சமீபத்தில் ரயில் விபத்து நடந்த நிலையில், மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்ததோடு, ஆலோசனை கூட்டத்தை நடத்தவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் மண்டல அளவிலான ஆலோசனைக் குழு கலைக்கபட்டுவிட்டது. இக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களாக பாஜ ஆதரவாளர்களை நியமித்திடவும், ஒன்றிய அரசுக்கு ஆதரவாக உள்ள தொழில், வர்த்தக பிரதிநிதிகளை தேர்வு செய்யவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.