சென்னை: சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த நேரத்திற்கும், இரவு 9 மணிக்கு மேல் தென் மாவட்டங்களுக்கு சரிவர பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்தும் நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போலீசாருக்கும் பயணிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் தகவல் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். எனவே அனைவரும் கலைந்து சென்றனர். நள்ளிரவில் ஆரம்பித்த சாலை மறியல் போராட்டம் விடிய விடிய நடந்ததால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான இரு புறமும் 3 கிலோ மீட்டர் வரை 6 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து பஸ் பயணிகள் கூறுகையில், ‘‘திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாமக்கல், கன்னியாகுமரி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, தென்காசி, தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதில், முன்பதிவு செய்யப்பட்டும் குறித்த நேரத்திற்கு சொந்த ஊருக்கு சென்று வர முடிவதில்லை. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மணிக்கணக்கில் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.