டெல்லி: தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்ககடலில் வரும் 16-ம் தேதி இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்ச்சியின் காரணமாக இன்று அதிகாலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி தென்கிழக்கு வங்ககடல் அதனை ஒட்டிய அந்தமான் கடல்பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதாகவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரக்கூடிய 16-ம் தேதி மத்திய மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுபெறக்கூடிய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இல்லாது, மேலும் மழையை ஏற்படுத்த கூடிய காரணியாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவுவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.