கிங்ஸ்டன்: ஐசிசி டி.20 உலககோப்பை தொடர் வரும் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆடுகிறது. இரு அணியின் முன்னணி வீரர்கள் ஐபிஎல்லில் ஆடி வரும் நிலையில் இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் முதல் டி.20 போட்டி இன்று அதிகாலை கிங்ஸ்டனில் நடந்தது. டாஸ் வென்ற தெ.ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பிராண்டன் கிங் 45 பந்தில், 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 79 ரன் அடித்தார். கைல் மேயர்ஸ் 34, ரோஸ்டன் சேஸ் நாட் அவுட்டாக 32 ரன் எடுத்தனர்.
தென்ஆப்ரிக்கா பவுலிங்கில் ஒட்னீல் பார்ட்மேன், பெஹ்லுக்வாயோ தலா 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணியில் ரசா ரீசா ஹென்ட்ரிக்ஸ் 87 (51 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), மத்தேயு ப்ரீட்ஸ்கே 19, வான் டெர் டுசென் 17 ரன் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். 19.5 ஓவரில் 147 ரன்னுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆனது. இதனால் 28 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்றது. பவுலிங்கில் அந்த அணியின் மத்தேயு ஃபோர்டு, குடாகேஷ் மோதி தலா 3 விக்கெட் எடுத்தனர். பிராண்டன் கிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.