கயானா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்து வலுவான முன்னிலை பெறும் நிலையில் உள்ளது. புராவிடன்ஸ் அரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 160 ரன்னுக்கு சுருண்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 54 ரன் விளாசினார். கீசி கார்டி 26, ஷமார் ஜோசப் 25, குடகேஷ் 11 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் முல்டர் 4, பர்கர் 3, மகராஜ் 2, ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 16 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்திருந்தது. டோனி டி சோர்ஸி 39, மார்க்ரம் 51, ஸ்டப்ஸ் 24, கேப்டன் பவுமா 4, பெடிங்காம் (0) பெவிலியன் திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜேடன் சீல்ஸ் 3, குடகேஷ் மோட்டி 2 விக்கெட் வீழ்த்தினர். கைல் வெர்ரைன் 50, வியான் முல்டர் 34 ரன்னுடன் களத்தில் இருந்தனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்கா 239 ரன் முன்னிலை பெற்றிருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.