Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தென் ஆப்ரிக்காவுடன் முதல் டி20: மீண்டும் பாண்ட்யா கில்லுக்கு இடம்; சித்து விளையாட்டில் கெத்து காட்டுமா இந்தியா?

கட்டாக்: இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக் நகரில் இன்று நடக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்து நடந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா அபாரமாக ஆடி, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. அதைத் தொடர்ந்து, இரு அணிகள் இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் இன்று நடக்கிறது.

உலகக் கோப்பை டி20 போட்டிகள், வரும் 2026 பிப்.7ம் தேதி துவங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக தற்போது துவங்கும் போட்டிகள் அமையவுள்ளன. கடந்தாண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி அட்டகாச ஃபார்மில் இருந்தது. நடப்பு தொடரிலும், அதை தக்க வைத்துக் கொள்ள இந்தியா முனைப்பு காட்டும். கடந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கு பின், இந்தியா ஆடிய போட்டிகளில் 26ல் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 4 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஒரு தொடரில் கூட இந்தியா தோல்வி அடையவில்லை.

தென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் டி20 போட்டியில் மோதும் இந்திய அணியில் ஒரு மாதத்துக்கு பின் சுப்மன் கில் மீண்டும் ஆடவுள்ளார். அபிஷேக் சர்மாவும், கில்லும் சிறந்த இணையாக திகழ்கின்றனர். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது. அதில், அபிஷேக் சர்மா அட்டகாசமாக ஆடி 163 ரன்களை குவித்திருந்தார். நடப்பு தொடரிலும் அவரது அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவும் மீண்டும் இணைந்துள்ளது சிறப்பம்சம்.

அவரது வருகை, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணியை மேலும் வலுப்படுத்தும் என கருதப்படுகிறது. அதேசமயம், இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்திறனில் தொய்வு ஏற்பட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 15 இன்னிங்ஸ்களில் அவர் 184 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்த போட்டியில் அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்ரிக்கா அணியில், மார்கோ யான்சன் அற்புதமான ஆல் ரவுண்டராக உருவெடுத்து அந்த அணிக்கு வலு சேர்த்து வருகிறார். வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே, மிரட்டல் பந்துகள் வீச தயாராகி வருகிறார். கேஷவ் மகராஜ் இடது கை சுழல் பந்து வீச்சில் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* களமாடும் வீரர்கள்

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், சிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்திப் சிங், ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

தென் ஆப்ரிக்கா: அய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஓட்நீல் பார்ட்மேன், கோர்பின் பாஷ், டெவால்ட் புரூவிஸ், குவின்டன் டிகாக், டோனி டிஜோர்ஸி, டானவன் ஃபெரெரியா, ரீஸா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ யான்சன், ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மகராஜ், குவெனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

போட்டி நேரம்: இரவு 7 மணி