சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் குமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் நாளை 17ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தென்காசி, தேனி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும். ராமநாதபுரத்திலும் தூத்துக்குடியிலும் ஒரு சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இஅது போல் மேற்கு தமிழகத்தை பொருத்தமட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, வால்பாறை, திருப்பூர், கரூரில் மழை பெய்யும். நீலகிரியில் கனமழை பெய்யும். மேலும் கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் 18ம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.