சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லையில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 கேட்டகிரி ரவுடிகளின் பட்டியலின் படி, ‘பறவை’ செயலி மூலம் ரவுடிகளின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தென் சென்னையில் தாதா சிடி மணியின் கூட்டாளியான சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி சோத்துப்பானை மணிகண்டன் (33) தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
ரவுடி மணிகண்டன் மீது 2 கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து ரவுடி சோத்துப்பானை மணிகண்டனை பிடிக்க அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையின் தீவிர தேடுதல் வேட்டையில் பல நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த ரவுடி சோத்துப்பானை மணிகண்டனை நேற்று முன்தினம் இரவு சென்னை அருகே கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.