டரோபா: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டிரினிடாட், பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ் இண்டீஸ் பந்துவீசியது. தொடக்க வீரர்கள் ரிக்கல்டன், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் தலா 4 ரன், கேப்டன் மார்க்ரம் 14, வாண்டெர் டுஸன் 5, டோனோவன் பெரேரா 8 ரன்னில் பெவிலியன் திரும்ப… தென் ஆப்ரிக்கா 8 ஓவரில் 42 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.
இந்த நிலையில் ஸ்டப்ஸ் – க்ரூகர் இணைந்து அதிரடியாக விளையாட, தென் ஆப்ரிக்க ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. ஸ்டப்ஸ் 76 ரன் (42 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), க்ரூகர் 44 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி வெளியேறினர். தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ ஃபோர்ட் 3, ஷமார் ஜோசப் 2, ரொமாரியோ, அகீல் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஆலிக் – ஹோப் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்தது.
ஆலிக் 40 ரன் (30 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அவுட்டானார். அடுத்து ஹோப் – நிகோலஸ் பூரன் அதிரடியில் இறங்க, வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஹோப் 51 ரன் (36 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பார்ட்மேன் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். கேப்டன் பாவெல் 7 ரன்னில் வெளியேறினார். சிக்சர் மழை பொழிந்த பூரன் 20 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.
அவரது அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து வென்றது. பூரன் 65 ரன் (26 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்), சேஸ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பூரன் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இன்று இரவு 12.30க்கு தொடங்கி நடைபெறும்.