சென்னை: தென் இந்தியாவில் முதல்முறையாக டாபர் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது. முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (22.8.2024) தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண்ராய் இ.ஆ.ப. தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, இ.ஆ.ப., சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மைய இயக்குநர் மருத்துவர் கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப., டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மோஹித் மல்ஹோத்ரா, செயல்பாட்டுத் தலைவர் ராகுல் அவஸ்தி, உற்பத்தித் தலைவர் ஹ்ரிகேஷ் ரமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.