ஸ்ரீநகர்: விரைவில் காஷ்மீரில் வந்தே பாரத் சேவை தொடங்கப்படும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், ‘ஜம்மு-ஸ்ரீநகர் இடையிலான வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தொடங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸுக்கு பதிலாக வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்படும்.
வடகிழக்கு பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். வரும் ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும். திரிபுராவில் ரயில் பாதை விரைவில் மின்மயமாக்கப்படும். காஷ்மீரில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில்கள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளன’ என்று கூறினார்.