கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்தவர் கேபிரியேல் கிங் மனைவி ஜெலின் மேரி(56). இவருக்கு ஜான் வினோத்குமார் என்ற மகன், 2 மகள்கள் உள்ளனர். ஜான் வினோத்குமார் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை ஜெலின் மேரி கண்டித்து வந்தார். ஆனால் அவர் திருந்தவில்லை.நேற்று முன்தினம் வழக்கம் போல் ஜான் வினோத்குமார் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை ஜெலின் மேரி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, ஜான் வினோத்குமார், ‘ஓயாமல் என்னை திட்டுகிறீர்களா? நான் இறந்து விடுகிறேன்’ என்று கூறி மது பாட்டிலில் விஷத்தை கலந்து குடித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் ஜெலின் மேரி, மகன் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை பிடுங்கி குடித்துவிட்டார். குடும்பத்தினர் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெலின் மேரி பரிதாபமாக உயிரிழந்தார். ஜான் வினோத்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.