தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட சிறிய கிராமம் சின்ன கனாஅள்ளி. இந்தக் கிராமத்தில் சிறுவிடை, பெருவிடை, சோனாலி, கடக்நாத் என 11 வகை களில் சுமார் 30 ஆயிரம் கோழிகளை வளர்த்து வரும் பெரிய அளவிலான பண்ணை இயங்கி வருகிறது. இந்தப் பகுதி வழியாக சென்றாலே கோழிகளின் ரீங்காரம் காற்றில் சங்கீதமாய் இசைக்கிறது. இன்ஜினியரிங் படித்துவிட்டு இந்த லார்ஜ் ஸ்கேல் கோழிப்பண்ணையை நடத்திவரும் சந்தோஷ் இந்த ஊரின் ஒரு குறிப்பிடத்தக்க இளைஞராகவும் விளங்குகிறார். ஒரு காலைப்பொழுதில் நாம் சின்னகனாஅள்ளிக்கு சென்றபோது, கோழிகளுக்குத் தீவனம் வழங்கிக்கொண்டிருந்த சந்தோஷ் நம்மைக் கண்டதும் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார். “பல தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபடும் குடும்பம் எங்களுடையது. வருடம் முழுக்க தக்காளி பயிரிடுவோம். அதுமட்டுமில்லாமல் பல வகையான காய்கறிகளும், வேர்க்கடலையும் சீசனைப் பொருத்து பயிரிடுவோம். நான் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்து அப்பாவுக்குத் துணையாக விவசாயம் செய்து வருகிறேன். அப்பாவுக்கு விவசாயம் மட்டுமின்றி கோழிக்குஞ்சு விற்பனையிலும் நல்ல அனுபவம் இருக்கிறது. 2013ல் அப்பா இறந்துவிட்டார். அந்த சமயத்தில் நான் படித்து முடித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குப் போனேன். அப்போது எனக்குக் கிடைத்த சம்பளம் போதுமானதாக இல்லை. என்ன செய்யலாம்? என யோசித்தபோது, அப்பா விட்டுச்சென்ற தொழிலான கோழிக்குஞ்சு விற்பனையைக் கையில் எடுக்கலாம் என முடிவெடுத்தேன். அதாவது கோழிக்குஞ்சுகளை வாங்கி அதை வளர்த்து தாய்க்கோழிகளாக்கி, முட்டைகளை உற்பத்தி செய்து, அவற்றைப் பொரிக்க வைத்து குஞ்சுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் என முடிவெடுத்தேன்.
முதல்கட்டமாக எங்களிடம் இருந்த பணத்தை வைத்து அரை ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினேன். அந்த இடத்தில் கோழி வளர்ப்பிற்கான ஷெட் ஒன்றை அமைத்தேன். அதன்பிறகு திருப்பூர் பல்லடம் பகுதியில் இருந்து 3000 நாட்டுக் கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். ஒரு கோழிக்குஞ்சு ரூ.13.50 என்ற கணக்கில் வாங்கினேன். குஞ்சுகளுக்குத் தேவையான கோழித்தீவனங்களை கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் முன்னோடி கால்நடை வளர்ப்பாளர்களின் அறிவுரைப்படி வழங்கி பராமரித்தேன். முதலில் தாய்க்கோழிகளை உற்பத்தி செய்யலாம் என்ற யோசனையில் முதல் 4 மாதங்கள் கோழிக்குஞ்சுகளை வளர்க்க ஆரம்பித்தேன். பருவத்திற்கு வந்ததும் அவை ஒவ்வொன்றாக முட்டையிடத் தொடங்கின. சராசரியாக 3000 கோழிகளில் இருந்து ஒரு நாளைக்கு 500 முட்டைகள் வீதம் கிடைக்கத் தொடங்கியது. ஒரு முட்டை ரூ.7 என அப்போதே விற்கத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து குஞ்சுகளை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்யலாம் என முடிவெடுத்து கோழி உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கினேன்.
அசில் நாட்டுக்கோழி, சோனாலி, கின்னிக்கோழி, வான்கோழி, கடக்நாத், கிரிராஜா, கிராம பிரியா, வாத்து, பேன்சி கோழி என பல வகையான கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். வளர்ந்த தாய்க்கோழிகளிடம் இருந்து கிடைக்கும் முட்டைகளை வைத்து இன்குபேட்டர் மூலம் மீண்டும் குஞ்சுகளைப் பொரிக்க வைத்து, கோழிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். எல்லா வகையான கோழிகளுக்கும் தனித்தனியான இடங்களில் ஷெட் அமைத்து தனித்தனியான முறைகளில் பராமரித்து வந்தேன். அதன்படி, கோழிகளைப் பகல்நேரங்களில் மேய்ச்சலுக்குப் பழக்கினேன். நிலத்தில் பசுந்தீவனங்களை மேய்கிற கோழிகளுக்கு கூடுதலாக கம்பு, சோளம் போன்றவற்றையும் தீவனமாகக் கொடுப்பேன். மாலை நேரத்தில் கோழிகளை ஷெட்டில் அடைப்பதற்கு முன்பாக வாங்கி வைத்திருக்கிற தீவனங்களை ஒருமுறை கொடுப்பேன். அப்போதுதான் சரியாக மேய்ச்சல் எடுக்காத கோழிகள் நல்ல முறையில் தீவனத்தை எடுத்துக் கொள்ளும்.
இப்படி வளர்கிற கோழிகளை அதன் குஞ்சு விற்பனைக்காக மட்டுமே வளர்த்து வந்தேன். அதன்படி, பிறந்து ஒரு நாளான குஞ்சுகளில் இருந்து, 40 நாள் ஆன கோழிகள் வரை அனைத்தையும் விற்பனை செய்து வருகிறேன். ஒருநாள் கோழிக்குஞ்சுகளை ரூ.40க்கும், அடுத்தடுத்த ஒரு மாதக்கோழிகளை வெவ்வேறு விலையிலும் கொடுத்து வருகிறேன். சராசரியாகப் பார்த்தால், 40 நாள் வளர்ந்த கோழிகளை ரூ.100க்கு விற்பனை செய்து வருகிறேன். கோழிப்பண்ணையைப் பொருத்தவரை தினசரி செலவு என்பது கோழிகளுக்கு கொடுக்கக்கூடிய தீவனம்தான். ஏனெனில், ஒரு நாளைக்கு குறைந்தது 5 மூட்டைகளாவது தீவனமாக கொடுக்கிறேன். ஒரு மூட்டை தீவனத்திற்கு ரூ.1500 வரை செலவாகும். அது இல்லாமல் கோழி பராமரிப்பு, கோழிகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி என மேலும் பல செலவுகள் வந்து கொண்டே இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால், என்னிடம் சராசரியாக 30 ஆயிரம் கோழிகள் இருக்கின்றன. எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு வரும். இப்படித்தான் எனது கோழிப் பண்ணையின் செலவைக் கணக்கிடுவேன்.
40 நாள் வயதுடைய கோழிகளை ரூ.100க்கு விற்பனை செய்கிறோம் அல்லவா? இந்த 100 ரூபாயில் 40 ரூபாய் கோழிக்குஞ்சின் மதிப்பு. ஒரு நாளைக்கு ஒரு கோழியை வளர்ப்பதற்கு ஆகும் செலவை ரூ.1 எனக் கணக்கிடுகிறோம். அதன்படி 40 நாளுக்கு 1 கோழியை வளர்த்தெடுக்க ரூ.40 செலவாகிறது. இப்படி 80 ரூபாய் செலவு போக மீதமுள்ள, 20 ரூபாயில் 10 ரூபாயை ஆள் கூலி, கரண்ட் பில் மற்றும் வண்டி வாடகை போன்ற செலவுகளுக்கு கழித்துக்கொள்ளலாம். இதுபோக மீதமுள்ள 10 ரூபாய்தான் எங்களது லாபம். அதாவது, ஒரு கோழியை 40 நாள் வளர்த்து விற்கும்போது எங்களுக்கு ரூ.10 லாபம் கிடைக்கும். அந்த வகையில், எனது பண்ணையில் இருந்து கோழிகள் விற்பனை ஆகிக்கொண்டே இருக்கும். மாதம் பத்தாயிரம் கோழிக்குஞ்சுகள் விற்பனை ஆனால் ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். எத்தனை குஞ்சுகள் விற்பனை ஆகிறதோ அதனைப் பொருத்து வருமானமும் மாறும். என்னிடம் கோழிக்குஞ்சுகள் வாங்குபவர்கள் தொடர் வாடிக்கையாளர்கள்தான். இந்தக் கோழி வளர்ப்பிற்கு என்னோடு சேர்ந்து எனது குடும்பமும் உழைக்கிறது. அவர்களின் உழைப்பும் இந்த வருவாயில் அடங்கி இருக்கிறது’’ என நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
சந்தோஷ்: 97515 92013.
கோழிகளை அடைத்து வைக்கும் ஷெட்டின் தரைப்பகுதியில் தூளாக்கப்பட்ட வேர்க்கடலை ஓடுகள் போட்டு வைக்கப்படுகிறது. இந்த மிருதுவான உடைந்த வேர்க்கடலை ஓடுகளால் தரையின் வெப்ப அளவு மிகுதியாக குறைக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு இதமான சூழல் நிலவுகிறது. மேலும் கோழிகளின் கழிவுகள் இந்தத் துகள்கள் மீது விழுவதால் ஷெட்டை சுத்தம் செய்யும் பணியும் எளிதாக இருப்பதாக கூறப்படுகிறது.
கோழி வளர்ப்பில் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். அந்த வகையில் பிறந்து 7வது நாளில் ஒரு தடுப்பூசியும், 14வது நாள் 2வது தடுப்பூசியும், 21ம் நாள் 3வது தடுப்பூசியும் கட்டாயம் கொடுக்க வேண்டும். அதன்பின் 45-50 நாட்களில் அம்மை நோய்க்கான தடுப்பூசியும், 60-70 நாட்களில் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசியும் கொடுப்பது அவசியம்.