தேனி: சின்னமனூர் அருகே சோனை கருப்பண்ண சாமிக்கு 2 ஆயிரம் மது பாட்டில்களை கொண்டு படையல் போடப்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் பழமை வாய்ந்த சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுவதால் விழா நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. பக்தர்கள் மட்டும் சனிக்கிழமைகளில் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடிப்பெருந்திருவிழாவின் 4, 5வது சனிக்கிழமைகளின் இடைவெளியில், சனீஸ்வர பகவான் கோயிலின், உபகோயிலான சோனை கருப்பண்ணசாமிக்கு மது படையலுடன் சிறப்பு பூஜை நடைபெறும். இந்த சிறப்பு பூஜை, கடந்த 12ம் தேதி இரவு நடந்தது. இதையொட்டி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் படையலிட்டு பூஜை செய்யப்பட்டது.
பக்தர்கள் வழங்கிய 47 ஆடுகள், 27 கோழிகள் பலியிடப்பட்டு, அசைவ விருந்து பரிமாறப்பட்டது. நள்ளிரவு 12 மணி வரை நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.