சென்னை: தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 10க்கும் மேற்பட்ட ரயில்கள் வருகின்றன. நேற்று காலை 6.30 மணி அளவில் தென்மாவட்டத்தில் இருந்து ரயிலில் வந்த 90 வயது மூதாட்டி ஒருவர் தனது மகனுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அவரது மகன், அந்த மூதாட்டியை பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையில் அமர வைத்து விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக காணவில்லை. இதனால் பதற்றமடைந்த அந்த மூதாட்டி கண்ணீருடன் பரிதவித்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அவரை பார்த்த மற்ற பயணிகள் மூதாட்டி தனியாக கலங்கிய கண்களுடன் இருப்பதை பார்த்தனர்.
அவரும் யாருடனும் எதுவும் பேசாமல் அழுகையை அடக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தோட என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அவரது கையில் ஊன்று கோல் ஒன்றும் மஞ்சப்பை ஒன்றும் இருந்தது. வேறு எந்த லக்கேஜோ, உடமைகளோ எதுவும் இல்லை. இதை பார்த்த பயணிகள் அந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுக்க தொடங்கினர். அப்போது, பேச முடியாமல் கலங்கியபடியே இருந்தார். அவரை தேற்றிய பயணிகள், என்ன பாட்டி நீண்ட நேரமாக இங்கே இருந்து கொண்டிருக்கிறீர்கள்? என்று பேச்சு கொடுத்தனர். வயது மூப்பின் காரணமாக பரிதவித்த அந்த பாட்டி நீண்ட நேரத்துக்கு பின்னர் பேச தொடங்கினார். ஐயா, நான் தூத்துக்குடி பக்கம் விளாத்திகுளத்தில் இருந்து எனது மகனுடன ரயிலில் வந்தேன்… என்னை இங்க உட்கார வைத்துவிட்டு எனது மகன் இந்தா வந்திருதேன்னு போனான்… ஆனா இன்னும் அவன காணல… என்ன ஆனானு தெரியல’ என்று கண்கலங்கியபடி கூறினார்.
அவர் ரொம்ப நேரமா அழுகிட்டு இருந்ததை பார்த்த சக பயணகளும் கண்கலங்கினர். பாட்டி உங்க பையன் வந்துருவான்.. எப்படியாவது அவர கண்டுபிடிச்சிரலாம்… நீங்க அழாதீங்கன்னு ஆறுதல் சொன்னார்கள். உடனடியாக அங்கிருந்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அவர்கள் உடனடியாக வந்து மூதாட்டியிடம் விசாரித்தார்கள். ஆனால் பாட்டிக்கு முழு அளவில் தன்னோட சுய விபரங்களை சொல்ல தெரியவில்லை. பாட்டிக்கு எந்த ஊர் என்று விசாரித்தார்கள். அதற்கு அந்த பாட்டி, தன்னோட ஊர் விளாத்திகுளம் என்றும், நாகலாபுரம் ஆத்தங்கரை என்றும் தெரிவித்தார். தன்னோட மகன் பெயர் காமராஜ் என்றும், தன்னோட பெயர் முத்து காமாட்சி என்றும் தெரிவித்தார்.
மற்ற விபரங்கள் எல்லாம் முழுமையாக சொல்ல தெரியவில்லை. தொடர்ந்து சென்னைக்கு யாரை பார்க்க வந்தீர்கள் என்று கேட்டனர். ஆனால் அதற்கு அவரால் பதில் சொல்ல தெரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவராக பேச தொடங்கினார். சென்னைக்கு என் மகனோட தான் வந்தேன். என்னோட துணி இருக்கிற பெரிய பேக் வைச்சிருந்தான். நான் தூக்கிட்டு வாரேன்னு தான் சொன்னேன். ஆனா அவன் உன்னால தூக்க முடியாதுன்னுட்டான். அவனே தான் தூக்கிட்டு வந்தான். எங்கிட்ட சொல்லாம எங்கேயும் போகமாட்டான்.. கடவுளே எம்புள்ளய எப்படியாவது கூட்டிட்டு வந்துடு…. என மூதாட்டி வயது முதிர்ந்த மொழியில கண்கலங்கி சொன்னது அங்கிருந்தவர்கள் மனதை கலங்கச் செய்தது.
இதையடுத்து, அவர் வைத்திருந்த மஞ்சப்பையை போலீசார் பிரித்து பார்த்தனர். அந்த பையில் இருந்த துண்டு தாளில் 97887 34342 என்ற செல்போன் எண்ணும் காமராஜ் என்ற பெயரும் இருந்தது. அந்த நம்பருக்கு அருகில் இந்த சக பயணிகளும், ரயில்வே போலீசார் தொடர்ந்து போன் செய்தனர். அந்த நபர் போனை எடுக்கிறார். ஆனால் பதில் தராமல் வைத்து விடுகிறார். பல முறை அந்த நம்பருக்கு போன் செய்தாலும் இதே நிலை தான் தொடர்ந்தது. பாட்டியோட மகனுக்கு ஏதாவது பிரச்னையா? அல்லது பாட்டியை அப்படியே ரயில் நிலையத்தில் விட்டு விட்டு சென்று விட்டாரா? என்பது புரியாத புதிராக உள்ளது. இதனால் ரயில்வே போலீசார் அந்த மூதாட்டியை அழைத்து சென்று அவரது மகன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்னை இங்க உட்கார வைத்துவிட்டு எனது மகன் இந்தா வந்திருதேன்னு போனான்… ஆனா இன்னும் அவன காணல… என்ன ஆனானு தெரியல.