சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய கணவர் நாகராஜன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்த நிலையில், நாகராஜனின் இளைய மகன் ராஜ்குமாருக்கும், திருபுங்கூரை சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கும் நேற்று சீர்காழியில் திருமணம் நடந்தது. தந்தை மீது அதிக பாசம் கொண்ட ராஜ்குமார் தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என நண்பர்களிடம் சோகத்தில் கலங்கியுள்ளார்.
தங்களது நண்பனின் ஏக்கத்தை போக்கும் வகையில் நாகராஜின் ஆளுயர கட்அவுட் ஒன்றை ராஜ்குமாரின் நண்பர்கள் தயாரித்தனர். இந்த படத்தை புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது தந்தையின் கட்அவுட்டை பார்த்து ராஜ்குமார் கண் கலங்கினார். திருமணத்துக்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் இதைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் மணமகளுக்கு ராஜ் குமார் தாலி கட்டினார்.