நன்றி குங்குமம் டாக்டர்
வயிற்று உப்புசம், வீக்கம், தலைவலி, மைக்ரேன் வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, கவலை, மனப்பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் மாதவிடாய் வருவதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன் துவங்கி மாதவிடாய் இரண்டு, மூன்று நாட்கள் வரை நீடிக்கும். இதைத்தான் மாதவிடாய்க்கு முந்தைய குழப்ப நிலை (பி.எம்.எஸ்) என்கிறோம்.
*இந்த சமயங்களில் ஏற்படும் உடல்வலி, தலைவலிக்கு எளிய வைத்தியமாக இளம் சூடான நீரில் குளித்தல், சுக்குகாபி, இஞ்சி மரப்பா போன்றவை சாப்பிடலாம்.
*இந்நாட்களில் அதிகமாக காய்கறிகள், கீரை, பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
*தூள்உப்பு, சீனி, மிளகாய், புளியை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக கல் உப்பு, பனைவெல்லம், இஞ்சி, குடம்புளி பயன்படுத்த வேண்டும்.
*மாதவிடாய்க்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக அடிவயிற்றில் வலி ஏற்படும். அதற்கு சிவப்பரிசி, உளுந்து, பாசிப்பயறு இவற்றை உணவில் எந்த விதத்திலாவது அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயக்களி, உளுந்தங்களி, சுக்குக்களி இவையும் நல்ல தீர்வைத்தரும்.
*தினமும் தூய்மையான தேன் குடிப்பது நல்லது.
*கேழ்வரகு, கறுப்பு உளுந்து உணவில் சேர்க்க வேண்டும்.
*இஞ்சி, காய்ந்த திராட்சை, தனியா, சீரகம் தலா 5 கிராம் இவற்றை தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்து அருந்தலாம்.
*கொய்யா, மலைவாழை, உலர்திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் கூடவே சிறிதளவு இஞ்சி துருவல், 1 tsp எலுமிச்சைசாறு எல்லாவற்றையும் கலந்து 1 சிட்டிகை இந்துப்பு தூவி உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
*யோகமுத்திரை செய்வதும் நல்லது.
*மலைவாழை, அன்னாசி, பப்பாளி பழங்கள் அவசியம் எடுத்துக் கொள்ளவேண்டும். இவை மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு மட்டுமல்லாமல் கர்ப்பப்பை
தசைகளையும் வலுப்படுத்தும்.
*நசுக்கிய இஞ்சி, சோம்பு 1 tsp குரோசாணி ஓமம் 2 tsp தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை உணவுக்கு முன் அருந்தலாம்.
தொகுப்பு: மகாலஷ்மி சுப்ரமணியன்