திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பாறைக்குளம் கிராமத்தை சேர்ந்த முத்து மகன்கள் மருதுபாண்டி (45), உதயகுமார் (40), மணிகண்டன் (35). மூவரும் கூலி தொழிலாளர்கள். முத்துவின் தம்பி கருணாநிதியின் மகன் மாரிச்சாமி (40). இவர் எல்லை பாதுகாப்புப்படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர்களது வீடு அருகருகே உள்ளது. மாரிச்சாமி – மருதுபாண்டி தரப்புக்கும் இடையே சொத்து தகராறு மற்றும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை மணிகண்டன், அவரது மனைவி மல்லிகாதேவி இடையே குடும்ப தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மாரிச்சாமி, தன்னை திட்டுவதாக கருதி மணிகண்டனிடம் தகராறு செய்தார். தகராறை விலக்க மருதுபாண்டி, உதயகுமார் ஆகியோர் அங்கு வந்தனர்.
சகோதரர்கள் மூவரும் சேர்ந்து தன்னை தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள் சென்ற மாரிச்சாமி அங்கிருந்து துப்பாக்கியை எடுத்து வந்து. தனது அண்ணன் மகன்கள் மூவரையும் நோக்கி 5 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டார். இதில் இரண்டு குண்டுகள் உதயகுமாரின் விலா பகுதியில் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார். ஒரு குண்டு அருகே கடையில் இருந்த கவியரசு என்பவரது மகன் கிஷோரின் (10) வலது கை தோள்பட்டையில் பாய்ந்தது. படுகாயமடைந்த இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாரிச்சாமியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.