திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் வெறிநாய் கடித்து ராணுவ வீரர் உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று வெறிநாய் ஒன்று தெருவில் நடந்து சென்றது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் (37) மற்றும் விடுமுறையில் வந்துள்ள ராணுவ வீரரான சுரேஷ் (35) ஆகியோரை வெறி நாய் கடித்து குதறியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் வெறி நாயை விரட்டியடித்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு போதிய வசதி இல்லாததால் அங்கிருந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இருப்பதில்லை என்று குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், உடனடியாக தெரு நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.