வால்பாறை : வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் வால்பாறையில் கடந்த 2 வாரங்களாக மழையின் பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதனால் வால்பாறை பகுதியில் அருவிகள் மற்றும் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. திரும்பிய இடமெல்லாம் பச்சை பசேல் என இயற்கை காட்சிகள் மனதை கவரும் விதமாக ரம்மியமாக காட்சியளிக்கிறது.
சாரல் மழை தொடர்வதால் சோலையார் அணைக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து குறையாமல் தொடர்வதால் சோலையார் அணை நீர்மட்டம் தொடர்ந்து 163 அடியாக உள்ளது.
எனவே பல்வேறு தேயிலை எஸ்டேட்களை சேர்ந்த தேயிலை தோட்டங்களை நீர் சூழ்ந்து உள்ளது. சோலையார் அணையில் இருந்து சுமார் 2 ஆயிரம் கனஅடி நீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. 300 கன அடி உபரி நீர் சோலையாற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.
சோலையார் அணை நிரம்பி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டுள்ளது. அணை மதகுகள் வழியாக ஆர்ப்பரித்து செல்லும் நீரை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.