வால்பாறை : கோவை மாவட்டம் சோலையார் அணையின் இடது கரை மற்றும் வலது கரை என இரு குடியிருப்பு பகுதிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் இடது கரை பகுதியில் பொதுமக்கள் குடியிருந்த பகுதியில் பட்டா வழங்க தடையில்லா சான்று வழங்கிய நிலையில், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து பட்டா வழங்கி உள்ளது.
இந்நிலையில் வலது கரையில் சில கடைகள் உள்ளதால் பொதுப்பணித்துறையினர் இட வாடகை, வீட்டு வாடகை என 90 உரிமைதாரர்களிடம் பல்வேறு வருவாய் வகைகளின் பேரில் அரசுக்கு வருவாய் வசூல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வாடகை பாக்கி செலுத்தாத சில வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். பொதுமக்கள் கூறுகையில், ‘‘சுமார் 50 வருடங்களாக வலது கரையில் குடியிருந்து வருகிறோம்.
வீடு கட்டி ஒழுகாமல் தங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலையார் அணை கட்டும்போது மக்கள் தங்கிய பகுதியில் வசிக்கிறோம். அணைகள் கட்டி பல ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், பொதுப்பணித்துறை விட்டுக்கொடுக்க வேண்டும்.
இடது கரைக்கு பட்ட வழங்க ஒப்புதல் அளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வலது கரைக்கு பட்டா வழங்க ஒப்புதல் தர வேண்டும். சார் ஆட்சியர், மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்து உள்ளனர்.