திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 380ஐ தாண்டி இருக்கிறது. இதற்கிடையே மீட்புப் பணி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மாயமானவர்களின் உடல்களை தேடும் பணி நவீன ட்ரோன் மூலம் நடத்தப்படுகிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை, கேரளா மற்றும் ராணுவ மோப்பநாய் பிரிவு, சிறப்பு மீட்புப் படையினர், ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவு, கேரளா போலீஸ், தீயணைப்புத் துறை, வனத்துறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்புத் துறை, மருத்துவக் குழு, இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை என்று 12 குழுக்களைச் சேர்ந்த 1264 பேர் 6 பிரிவுகளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் காணாமல் போனவர்கள், அந்த பகுதியில் இருந்த வீடுகளை கண்டுபிடிப்பதற்காக நேற்று முதல் டிரோன் சர்வே நடத்தப்படுகிறது.
இந்தப் பகுதிகளின் பழைய புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்து இந்த சர்வே நடத்தப்படுகிறது. அதேபோல் ஐ போர்ட் என்ற நவீன டிரோன் மூலம் மண்ணுக்குள் உடல்கள் ஏதாவது புதைந்து கிடக்கிறதா? என்பது குறித்தும் நேற்று ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த பயங்கர நிலச்சரிவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 380ஐ தாண்டிவிட்டது. 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி முழுவதும் 2 அடிக்கு மேல் சேரும் சகதியுமாக நிறைந்து காணப்படுகிறது.
தொடர்ந்து நவீன உபகரணங்களை பயன்படுத்தி சகதிக்குள் ஏதாவது உடல்கள் இருக்கிறதா? என்பது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவு பாதித்த சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகளில் 31 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண், பாறைகளை அகற்றி பரிசோதிக்கப்படுகிறது. அடையாளம் காணப்படாத உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 380ஐ தாண்டிவிட்டது.
64 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படாமல் இருந்தது. இந்த உடல்களை உரிமை கோர யாரும் முன்வராததால் அவற்றை சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அருகிலுள்ள புத்துமலை பகுதியில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று இந்த இடத்தில் குழிகள் தோண்டப்பட்டு 8 உடல்கள் சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன. இன்று மீதமுள்ள உடல்கள் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு சட்ட அம்சங்களை ஆராய வேண்டும்
ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி நேற்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை மற்றும் புஞ்சிரிமட்டம் பகுதிகளை பார்வையிட்டார். முன்னதாக அவர் கல்பெட்டா அரசு விருந்தினர் மாளிகையில் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் முகம்மது ரியாசுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒரு பேரழிவாகும். இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்ட அம்சங்களை ஆய்வு செய்த பின்னரே இது தொடர்பாக முடிவெடுக்க முடியும்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளுக்கும், அவர்களது மனநிலையை ஒருமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
* பிரபல மலையாள இயக்குனர் மீது வழக்கு
கடந்த 2021ல் ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடித்த ஒரு தாத்விக அவலோகனம் என்ற மலையாளப் படத்தை டைரக்ட் செய்தவர் அகில் மாரார். டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கேரள முதல்வர் நிவாரண நிதி குறித்து சில குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்தார். முதல்வர் நிவாரண நிதியில் இருந்து முறைகேடாக பணம் செலவழிக்கப்படுகிறது.
ஆகவே முதல்வர் நிவாரண நிதிக்கு நான் பணம் கொடுக்க மாட்டேன் என்றும், அதற்குப் பதிலாக நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பேன் என்றும் கூறினார். இதையடுத்து அகில் மாரார் மீது கொச்சி இன்போ பார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதேபோல முதல்வர் நிவாரண நிதி குறித்து குற்றச்சாட்டு கூறிய 10க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* சாலியார் ஆற்றில் 205 உடல்கள் மீட்பு
சாதாரணமாக நிலச்சரிவில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு அருகில் இருந்து தான் கிடைக்கும். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான பெரும்பாலானோரின் உடல்கள் 35 கிமீக்கு அப்பால் உள்ள சாலியார் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன. இந்த ஆற்றில் இருந்து 73 உடல்களும், 132 உடல் பாகங்களும் கிடைத்து உள்ளன.
உடல் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனை நடத்தி விவரங்களை சேகரிக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. சாலியார் ஆற்றில் மேலும் உடல்கள் கிடக்கலாம்? என்று கருதப்படுவதால் அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதில் மீட்புப் படையினருடன் உள்ளூர் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
* முதல்வரிடம் நிவாரண நிதி வழங்கிய பேரன்
வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாடு முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு நிவாரண நிதி குவிந்து வருகிறது. இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் பேரனான இஷான் விஜய், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.12,530 வழங்கியுள்ளார். முதல்வர் அலுவலகத்திற்கு வந்து தனது தாத்தா பினராயி விஜயனிடம் இந்த தொகையை வழங்கினார். தனக்கு கிடைத்த பாக்கெட் மணியை வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொடுத்த பேரனை முதல்வர் பினராயி விஜயன் பாராட்டினார்.