மேட்டுப்பாளையம்: ஊட்டி மலை ரயில் போக்குவரத்து 4 நாளுக்குப்பின் நேற்று முன்தினம் மீண்டும் துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – கல்லாறு இடையே ரயில்வே பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும், கல்லாறு – அடர்லி இடையே மண் சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணியளவில் ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில் பாதி வழியிலேயே மேட்டுப்பாளையத்திற்கு திருப்பப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பயணக்கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்பட்டது. நேற்று ஒரு நாள் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை இருக்கும் என எச்சரிக்கை வானிலை எச்சரித்துள்ள நிலையில் மலை ரயில் சேவை மேலும் ஒரு வாரம் ரத்து செய்யப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.