திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே பெட்டிக்கடையில் வாங்கிய பிரபல குளிர்பான பாட்டிலில் கழிவு பொருட்கள் கலந்திருப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிப்பட்டு அருகே கரிம்பேடு கிராமத்தில் நகரி பள்ளிப்பட்டு சாலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த துரைபாபு என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு பொம்மராஜ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி(28) என்பவர் நேற்று சென்று பிரபல குளிர்பான நிறுவனத்தில் ரூ.10 விலைக் கொண்ட 200 மில்லி குளிர்பானம் கேட்டுள்ளார்.
அதனை கடை வியாபாரி எடுத்து கொடுத்தபோது அதில் கழிவு பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பொதுமக்கள் அருந்தும் குளிர்பானத்தில் கழிவுபொருள் கலந்திருப்பதை பார்த்த நுகர்வோர்கள் மற்றும் கிராமமக்கள் குளிர்பான தரத்தின் மீது சந்தேகத்தை எழுப்பினர். பள்ளிப்பட்டு சேர்ந்த குளிர்பான ஏஜெண்டிடம் கடை வியாபாரி புகார் செய்தார். அதே நேரத்தில் நுகர்வோர்கள் சார்பில் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. குளிர்பான பாட்டிலில் கழிவு பொருட்கள் கலந்திருப்பது பள்ளிப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.