லால்குடி: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நர்சை பாலியல் பலாத்காரம் செய்த ரயில்வே போலீஸ்காரர் மீது லால்குடி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். மருத்துவமனை விடுதியில் தங்கி பணியாற்றி வரும் அவர், வாரம் ஒருநாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு பஸ்சில் சென்று வருவார்.
சில மாதங்களுக்கு முன் பஸ்சில் ஊருக்கு சென்ற போது அதே பஸ்சில் வந்த திருச்சி ரயில்வே போலீசாக பணியாற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சதீஷ்ராஜா (40), “நான் 1 முதல் 5ம் வகுப்பு வரை உங்களுடன் படித்து வந்தேன். ஞாபகம் இல்லையா?’’ எனக்கூறி பழகியுள்ளார். இது செல்போன் மற்றும் வாட்ஸ் அப்பிலும் தொடர்ந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 6ம் தேதி சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து நர்சை குடிக்க வைத்துள்ளார்.
இதில் மயங்கியவரை விடுதியில் உள்ள அறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், நிர்வாண கோலத்தில் அவரை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து பலமுறை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த நர்ஸ் செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டு வீட்டிலேயே மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது கணவர் விசாரித்தபோது, காவலர் சதீஷ் ராஜா செய்த தொந்தரவை சொல்லி அழுது புலம்பினார். இதை தாங்கமுடியாமல் கணவன், மனைவியும் தற்கொலைக்கு முயன்றதால் குடும்பமே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளது. பின்னர் அந்த நர்ஸ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் நேற்று சதீஷ் ராஜா மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
* ஆசிரியைக்கு பாலியல் தொல்லை வட்டார கல்வி அலுவலர் சஸ்பெண்ட்
நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலராக மணிகண்டன் பணியாற்றி வருகிறார். இவர் ஆசிரியைகளிடம் பணம் வாங்குவது, இரவு நேரத்தில் வாட்ஸ்அப்பில் இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் அரசு பள்ளி ஆசிரியையிடம் பணம் பெற்றுக்கொண்டது மட்டும் இன்றி, இரவு நேரங்களில் வாட்ஸ்அப் எண்ணுக்கு பாலியல் ரீதியான இரட்டை அர்த்தம் உடைய மெசேஜை அனுப்பி உள்ளார். இது குறித்து அந்த ஆசிரியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து வட்டார கல்வி அலுவலர் மணிகண்டனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை இயக்குநர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.