*புத்தக வெளியீட்டு விழாவில் அரசு கொறடா பேச்சு
ஊட்டி : ஒரு சமுதாயம் முன்னேற பெண்கள் கல்வியறிவு பெறுவது முக்கியமானது என ஊட்டியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக அரசு கொறடா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி ஒய்டபுள்யுசி ஆனந்தகிரி அரங்கில் கலைக்கூடல் அமைப்பு சார்பில் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு அரிசந்திரன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் எழுதிய இந்தியாவில் கூட்டு உற்பத்தியும், கூட்டுறவும் மற்றும் சமூக ஊடங்கள் நம்பத் தகுந்தவையா ஆகிய புத்தகங்களை அரசு தலைமை கொறடா ராமந்திரன் வெளியிட்டார்.
புத்தகங்களை மூத்த வழக்கறிஞர் விஜயன் பெற்றுக் கொண்டார். புத்தகங்களை நமக்கு படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதற்கு கல்வி முக்கியம். ஒரு சமுதாயம் முன்னேற கல்வியறிவு முக்கியம். அதிலும் பெண் கல்வி இன்றியமையாதது. பெண் கல்விக்காக தமிழ்நாடு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் படிக்க வேண்டும் என முதன்முதலில் வலியுறுத்தியது நீதி கட்சிதான். அதன் தொடர்ச்சியாக திராவிட கட்சிகள் பெண் கல்விக்கு முக்கியதுவம் அளித்தன.
தொடக்கக்கல்வி முதல் உயர் கல்வி வரை படிக்க அரசு உதவுகிறது. செலவில்லாமல் மாணவர்கள் மருத்துவராகும் வரை படிக்கலாம். தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. தற்போது ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. ஏற்றுக்கொண்டால்தான் நிதி வழங்குவோம் என கூறுகின்றனர். நாம் இரு மொழி கொள்கையை பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
தமிழ், ஆங்கிலம் படித்த மாணவர்கள் பல நாடுகளுக்கு சென்று, பல தொழில்களை செய்கின்றனர். பலர் அரசு உயர் பதவிகளில் பணியாற்றுகின்றனர் என அரசு கொறடா பேசினார். விழாவில், மூத்த ஊடகவியாளர் ஆர்ஏ.தாஸ், மக்கள் சேவகர் முனியாண்டி, பழங்குடி சேவகர்கள் கரியன் மற்றும் முக்கி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விவசாய தொழிலாளர் முன்னேற்ற சங்க மாணவ அணி நிர்வாகி பூஜா நன்றி கூறினார்.