வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பிய உத்தரவில், திட்டமிடப்படாத புதிய மாணவர் விசாக்களுக்கான நேர்காணல்களை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட நேர்காணல்களை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுத்தம் தற்காலிகமானது என்றும், மாணவர்களின் சமூக ஊடக கணக்குகளை சோதனை செய்யும் நடவடிக்கையை விரிவுபடுத்த இந்த தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அனுமதித்த பிறகு சமூக ஊடக சோதனை குறித்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் உடனடியாக அமல்படுத்தப்படும். ஆனால், இதில் எந்த மாதிரியான சமூக ஊடக சோதனைகள் கடுமையாக்கப்படும் என தகவல்கள் வெளியிடப்படவில்லை.அமெரிக்காவின் பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடிய பல வெளிநாட்டு மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான பல நூறு கோடி நிதியை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி உள்ளது.
எனவே, மாணவர் விசா வழங்கும் போதே அவர்களின் சமூக ஊடக கணக்குகளை சோதிப்பதை மேலும் கடுமையாக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டிரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்திலேயே விசா விண்ணப்பதாரர்கள் அனைவரின் சமூக ஊடக கணக்குகளும் ஆய்வுக்கு உட்படும் விதிமுறை கொண்டு வரப்பட்டது. தற்போது மாணவர்களுக்கு விசா நடைமுறையில் இந்த சோதனையை மேலும் கடுமையாக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.