சென்னை: ஆன்மிகத் தளத்தின் சமூகநீதி அடையாளம் பங்காரு அடிகளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகழாரம் சூட்டியுள்ளனர். சித்தர் பீடத்தின் குரு அடிகளாரின் மறைவு மாற்று ஆன்மிகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அம்மா என்று செவ்வாடை பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் சித்தர் பீடத்தின் நிறுவனர். ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களைத் துவக்கி பெண்களே கோயிலின் கருவறைக்குள் சென்று பூசை செய்வதற்கு வழிவகுத்தார். மாதவிடாய்க் காலத்திலும் கோயிலில் வழிபடலாம் என்ற அவரது நிலைபாடு ஆன்மிக தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, பெண்களை கருவறைக்குள் அனுப்பிய முதல் பீடாதிபதியான சித்தர்பீடத்தின் குரு பங்காரு அடிகளாரின் மறைவு வேதனையளிக்கிறது. அவர் பிறப்பால் ஆண் என்றாலும் அனைவராலும் அம்மா என அழைக்கப்பட்டவர். அந்த அளவுக்குத் தாய்மை பண்புகளால் மகளிரின் பேரன்பைப் பெற்றவர். ஆன்மீகத் தளத்தில் பெண்களுக்கான மதிப்பீட்டைப் பெரிதும் உயர்த்தியவர். சங்பரிவார் சனாதனிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகமல் அவர்களுக்கு ஒரு சவாலாக இயங்கியவர். மறைந்த அடிகளாருக்கு விசிக சார்பில் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.