சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் அரசு பணியாளர் தரவரிசை பட்டியல் மற்றும் பதவி உயர்வுகளில் சமூகநீதிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் தலைமையில் குழு அமைத்த தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், ‘‘சமூக நீதியை பாதுகாக்கவும் தேவையான சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை இந்த குழு அரசுக்கு சமர்ப்பிக்கும்.
ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் தலைமையிலான இந்த குழு, சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும். மேலும் குழு தனது ஆய்வுகளை முடித்து, சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 3 மாத காலத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுவின் செயல்பாடுகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களையும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.