மதுரை: ‘தன் மீது தெரிவித்த பாலியல் புகார் பொய்யானது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயல் அலுவலர் வன்மத்தில் இதனை தவறாக தயாரித்து பரப்பியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மதுரை போலீஸ் கமிஷனரிடம் அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை. இவர் மீது 21 பெண் ஊழியர்கள், பாலியல் தொடர்பான புகார் மனு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியானது.
21 பெண்களின் கையெழுத்துடன் சமூக வலைத்தளங்களில் புகார் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனிப்பட்ட வன்மம் காரணமாகவே, தான் சஸ்பெண்ட் செய்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி வில்வநத்தம் ஜவகர் என்பவர் இந்த செய்தியை பரப்பிவிட்டதாகவும், இவர் மீது நடவடிக்கை கோரியும் மதுரை போலீஸ் கமிஷனரிடம் செல்லத்துரை புகார் மனு வழங்கியுள்ளார். மதுரை நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு, செல்லத்துரை அனுப்பியுள்ள புகார் மனு:
நான் இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையராக கடந்த மே 2022 முதல் பணியாற்றி வருகிறேன். எனது கண்காணிப்பில்தான் மதுரை, விருதுநகர் மாவட்ட கோயில்கள் உள்ளன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் செயல் அலுவலரான ஜவகர் மீது பல புகார்கள் வந்ததால், விசாரணை முடிவில் அவரை சஸ்பெண்ட் செய்தேன். கடந்த ஜூலை 31ல் அவர் பணிநிறைவு பெற வேண்டிய நிலையில், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்ததால் பணி ஓய்வு பெற அனுமதிக்கவில்லை.
இதில் என் மீது வன்மம் கொண்ட அவர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் என் நடத்தை குறித்து போலி ஆவணங்களை உருவாக்கி, அவதூறு கருத்துகளை பரப்பியுள்ளார். பொதுவாக அவர் ஆங்கிலத்தில்தான் பதிவுகள் வெளியிடும் பழக்கம் உள்ளனர். இதன்படி வாட்ஸ்அப்பில் ஆங்கிலத்தில் தகவல்களை பரப்பியுள்ளார். இதற்கிடையில், ஆக. 6ம் தேதி வாட்ஸ்அப்பில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வரும் 21 பெண்கள் சேர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அமைச்சர், அதிகாரிகள் என பலருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர்.
அதில், போக்சோ செல்லத்துரை எனக் குறிப்பிட்டு என் மீது பாலியல் புகார் இருப்பதாகவும், கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டியும் பரப்பியுள்ளார். இதிலுள்ள 21 பேர் கையொப்பம் உண்மையானதல்ல. ஒரே பேனாவினால், ஒரே நபரால் எழுதப்பட்டது போல தோற்றமளித்ததால், சோதனை செய்ததில், ஜவஹர்தான் எழுதியதாக தெரிகிறது. கையெழுத்தில் இருப்பவர்களும் புகார் தெரிவிக்க தயாராக உள்ளனர். எனவே விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதவிர, மதுரை கலெக்டர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கும் செல்லத்துரை மனு அனுப்பியுள்ளார். இதில், ‘‘தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டு சமூகத்தில் எனக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரப்பியதன் பேரில் பத்திரிகைகளிலும் இச்செய்திகள் வெளிவந்துள்ளன. இது பொய்யான புகார் மனு’’ எனத்தெரிவித்துள்ளார்.
* ‘எனக்கு சம்பந்தமில்லை’
அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை புகார் தெரிவித்துள்ள ஜவகரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘எனக்கும் இந்த பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த சம்பந்தமும் இல்லை. காலையில் செய்தி வெளியாகி இருப்பதை நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். நான் சஸ்பெண்டில் இருக்கிறேன். சமீபத்தில் ஒரு பெண் செயல் அலுவலரை அவர் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது வேறு பிரச்னையாக இருக்கலாம். எனக்கு ஏதும் தெரியாது’’ என்றார்.